வெயிலின் தாக்கத்தால் 3 மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்… தமிழ்நாடு, புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!!
டெல்லி : வெயிலின் தாக்கமானது அடுத்த 5 நாட்களுக்கு மேற்கு வங்கம், பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கடுமையாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டு இருக்கும் செய்தி குறிப்பில், டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் வடமேற்கு மாநிலங்களில் வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் மேற்கு வங்கம், பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை இருக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளிகளுக்கு ஏப்ரல் 24ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்கள் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் ஏப்.20, 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே சென்னை உட்பட 14 மாவட்டங்களில் நேற்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.