ஸ்விக்கி, சொமேட்டோ தொழிலாளர்களுக்கு நல வாரியம்: இயக்குநர் வசந்தபாலன் வரவேற்பு!

ஸ்விக்கி, சொமேட்டோ தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என்ற தமிழக முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புக்கு இயக்குநர் வசந்த பாலன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழக முதல்வர் ஓலா, உபர், சொமேட்டோ, ஸ்விக்கி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார். மகிழ்ச்சி. ஏனெனில் சமீபத்தில் வெளியான என்னுடைய ‘அநீதி’ படத்தில் உணவு விநியோகிக்கும் தொழிலாளர்களின் வலியை, வேதனையை சங்கம் அமைக்க முடியாத அவர்களின் ஊதிய பிரச்சினையை ஆழமாக நான் பதிவு செய்திருக்கிறேன்.

நற்செய்தியாக உணவு விநியோகிக்கும் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். என் சார்பாகவும், படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்” என பேசியுள்ளார்.