இந்திய அணிக்கு இம்சை கொடுக்கும் 4-வது பேட்ஸ்மேன் ஸ்பாட்!

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வெகு விரைவில் இந்தியாவில் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணிக்கு இம்சை கொடுத்து வருகிறது 4-வது பேட்ஸ்மேன் ஸ்பாட். அணியின் பேட்டிங் ஆர்டரில் அந்த இடத்தில் பேட் செய்யப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே அணியின் பேட்டிங் ஆர்டரில் களம் காணும் நான்காவது வீரர் யார் என்ற குழப்பம் நிலவி வருகிறது. அந்த இடத்தில் பல வீரர்கள் பேட் செய்ய வைத்து, அணி நிர்வாகம் சோதனை மேற்கொண்டுள்ளது. ஆனால், அதில் சிலர் மட்டுமே கச்சிதமாக பொருந்துகிறார்கள். அவர்களும் காயம், ஃபார்ம் போன்ற காரணங்களால் ஆடும் லெவனில் விளையாடும் வாய்ப்பை இழக்கின்றனர். இந்த சூழலில் தான் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, அந்த சிக்கலை பகிரங்கமாக சுட்டிக் காட்டியுள்ளார். உலகக் கோப்பை தொடர் தொடங்க வெகு சில நாட்களே உள்ள நிலையில் ரசிகர்களுக்கு இது அதிர்ச்சி தான்.

“யுவராஜ் சிங்கிற்கு பிறகு இந்திய அணியில் 4-வது இடத்தில் நிலையாக எந்த வீரரும் விளையாடவில்லை. ஸ்ரேயஸ் ஐயர் அதற்கு பொருந்திய நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்துக்கு புதிய வீரரை அடையாளம் கண்டாக வேண்டி உள்ளது” என கேப்டன் ரோகித் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 4-வது இடத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் (2019 உலகக் கோப்பை முதல்)

  • ஸ்ரேயஸ் ஐயர் – 805 ரன்கள், 47.35 பேட்டிங் சராசரி
  • ரிஷப் பந்த் – 360 ரன்கள், 36.00 பேட்டிங் சராசரி
  • கே.எல்.ராகுல் – 189 ரன்கள், 63.00 பேட்டிங் சராசரி
  • சஞ்சு சாம்சன் – 51 ரன்கள், 51.00 பேட்டிங் சராசரி

இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாட உள்ளன. இந்த தொடருக்கு ஆஸ்திரேலிய அணி முதற்கட்டமாக 18 வீரர்கள் இடம்பெற்றுள்ள அணியை அறிவித்துவிட்டது.