சென்னையில் உள்ள ஏரிகளில், 8 டி.எம்.சியை தாண்டிய குடிநீர் : நீர் சேமிப்பு அதிகரிப்பு.

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் இருப்பு 8 டி.எம்.சி.யை தாண்டியதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

சென்னை சென்னை மாநகருக்கு தேவையான குடிநீர் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து கொண்டு வந்து தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதுமான அளவில் நீர் இருப்பு இல்லாமல் இருந்தது. இதனால் கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் கண்டலேறு அணையில் இருந்து நீர் திறந்துவிட தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் ஆந்திர மாநில அரசு அதிகாரிகளிடம் கேட்டு கொண்டு உள்ளனர்.

தற்போது கிருஷ்ணா நதி நீர் கால்வாய் திட்டத்தின் கீழ் 35 மில்லியன் கன அடியும், கால்வாய் மூலம் 110 மில்லியன் கன அடி உட்பட 445 மில்லியன் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதுதவிர சோழவரம் ஏரியில் 127 மில்லியன் கன அடி, புழல் ஏரியில் 1,896 மில்லியன் கன அடி, கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரியில் 329 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கம் ஏரியில் 2 ஆயிரத்து 663 மில்லியன் கன அடி, வீராணம் ஏரியில் 859.95 மில்லியன் கன அடி உள்பட ஆக மொத்தம் 8 ஆயிரத்து 225.95 மில்லியன் கன அடி அதாவது 8.2 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

இது மொத்த இருப்பில் 62.21 சதவீதமாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 8 ஆயிரத்து 787 மில்லியன் கன அடி அதாவது 8.7 டி.எம்.சி. இருப்பு இருந்தது. தற்போதைய இருப்பு 8 டி.எம்.சி.யை தாண்டி உள்ளது. இது அடுத்த 8 மாதத்துக்கு போதுமானதாக இருக்கும். இதற்கிடையில் வரவிருக்கும் வடகிழக்கு பருவ மழை மூலம் அனைத்து ஏரிகளிலும் நீர் சேமிப்பை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.