2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை போலி ஆவணங்கள் மூலம் கனடாவுக்குள் நுழைந்த இந்திய மாணவர்கள் 700 பேரை நாட்டில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளது கனடா.
கடந்த 2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை போலி ஆவணங்கள் மூலம் 700 இந்திய மாணவர்கள் கனடாவுக்குள் நுழைந்த சம்பவம் இப்போது பூதாகரமாகியிருக்கிறது. சமீபத்தில் பஞ்சாம் மாநிலத்தைச் சேர்ந்த லவ்ப்ரீத் சிங் என்ற மாணவர் கனடாவில் குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார். அப்போது, அவருடைய ஆவணங்களை சோதனை செய்த கனடா குடியுரிமை அளிக்கும் அதிகாரிகள், அவரது ஆவணம் போலியானது என கண்டுபிடித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது அவருடன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவுக்கு சென்ற இந்திய மாணவர்கள் பலருடைய ஆவணங்கள் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் 2016ம் ஆண்டில் இருந்து 2020ம் ஆண்டு வரை 700 இந்திய மாணவர்கள் போலியான ஆவணங்களுடன் கனடாவில் வசித்து வருவது தெரியவந்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களை ஜலந்தரில் உள்ள ஏஜென்ட் பிரிஜேஷ் மிஸ்ரா என்பவர், கனடாவில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் பெயரில் போலி மாணவர் சேர்க்கை கடிதங்களை வழங்கியுள்ளார். இதை வைத்து மாணவர்கள் கனடாவில் படிப்பதற்கான உரிமத்தை பெற்றுள்ளனர். இந்த போலிக் கடிதத்தை தூதரக அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. கனடா சென்றபின், அந்தந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு இந்திய மாணவர்கள் சென்றபோதுதான், அவர்கள் வைத்திருந்தது போலி கடிதங்கள் என தெரிந்தது. இது குறித்து ஏஜென்ட் பிரிஜேஷ் மிஸ்ராவை மாணவர்கள் தொடர்பு கொண்டபோது, அவர் மன்னிப்பு கேட்டு, வேறு கல்லூரிகளில் சேர ஏற்பாடு செய்வதாக கூறி அவர்களை சமாளித்துள்ளார்.
இந்த மோசடியை கனடா எல்லை சேவைகள் முகமை (சிபிஎஸ்ஏ) கண்டறிந்து, போலி ஆவணங்கள் மூலம் கனடா வந்த இந்திய மாணவர்கள் 700 பேர் வெளியேறும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையடுத்து அந்த மாணவர்கள் கடந்த 5-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் உலக பஞ்சாபி சங்கங்களின் சர்வதேச தலைவரும், ஆம் ஆத்மி எம்.பி.யுமான விக்ரம்ஜித் சிங் சானே, கனடா அரசுக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்பினார். அதில், மாணவர்கள் மோசடி செய்யவில்லை என்றும், அவர்களுக்கு போலி கடிதங்களை கொடுத்து ஏஜென்ட் பணம் பெற்று மோசடி செய்துள்ளார் என விளக்கினார். இந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கடிதங்களை சரிபார்க்காமல் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய மாணவர்கள் கனடாவுக்குள் நுழைய குடியுரிமைத்துறையும் அனுமதித்துள்ளது. விக்ரம்ஜித் சிங்கின் வேண்டுகோள் கடிதத்தை அடுத்து, இந்திய மாணவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை கனடா அரசு நிறுத்தி வைத்துள்ளது.