ஈபிள் டவரில் இருந்து பாராசூட்டில் குதித்த மர்ம நபர்: பாரிஸில் நடந்த பரபரப்பு சம்பவம்!

பிரான்ஸு தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் டவரின் உச்சியில் இருந்து பாராசூட் மூலம் குதித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் டவர் வழக்கமாக பொதுமக்களின் பார்வைக்ககா காலை 9 மணிக்கு திறக்கப்படும். ஆனால், நேற்று அதிகாலை 5 மணியளவில் ஈபிள் கோபுரம் திறக்கப்படும் முன்பே காவலர்களின் கவனத்தை திசை திருப்பிய மர்ம நபர் ஒருவர், லிஃப்ட் மூலமாக கோபுரத்தின் உச்சிக்கு சென்றுள்ளார். காவல்துறையினர் அவரை பிடிப்பதற்குள்ளாக, கோபுரத்தின் மீது இருந்து கீழே குதித்து, தான் முதுகில் மாட்டியிருந்த பாராசூட்டை திறந்து பறந்துள்ளார்.

கோபுரத்தின் பாதுகாவலர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அவரை கவனமாக கண்காணித்தனர். அருகில் இருந்த விளையாட்டு மைதானம் ஒன்றில் பாராசூட் மூலம் தரையிரங்கிய அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் ஈபிள் கோபுரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு இருந்த அங்கிருந்து மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டலுக்கும், நேற்று கைது செய்யப்பட்ட இளைஞருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட இளைஞர் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை.