வெயிலின் தாக்கத்தால் உயரும் எலுமிச்சை விலை!

திண்டுக்கல் சந்தையில் ஏலம் விடப்பட்ட எலுமிச்சம் பழங்கள்.

வெயிலின் தாக்கம் குறையாததால் தேவை அதிகரித்ததையடுத்து எலுமிச்சை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

திண்டுக்கல்லில் உள்ள சிறுமலை செட் பகுதியில் ஞாயிறு, புதன், வெள்ளிக் கிழமைகளில் எலுமிச்சை சந்தை நடைபெறுகிறது. திங்கள் கிழமை வாழைச் சந்தை, சீசன் காலங்களில் பலாப் பழம் உள்ளிட்ட மாவட்டத்தில் விளையும் பழங்களை இங்கு கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை அடிவாரக் கிராமங்களான வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, கொடைக்கானல் மலையடிவாரப் பகுதியான அய்யம்பாளையம், கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் எலுமிச்சை சாகுபடி நடக்கிறது. இப்பகுதியில் விளையும் எலுமிச்சம் பழங்கள், திண்டுக்கல் காய் கறிச் சந்தைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

கோடை மாதங்களான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தேவை அதிகரிப்பு காரணமாக எலுமிச்சை விலை உச்சத்தைத் தொடும். மற்ற மாதங்களில் படிப்படியாக விலை குறைந்துவிடும். ஆனால், தற்போது வெயிலின் தாக்கம் தொடர்கிறது. மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகபட்சமாக 36 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை தொடுகிறது.

இதனால், சூட்டைத் தணிக்க எலுமிச்சம் பழங்களை வியாபாரிகள், பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். மேலும், கரூர், சேலம், சிவகங்கை, திருச்சி மாவட்டங்களிலிருந்தும், கேரள வியாபாரிகளும் எலுமிச்சம் பழங்களை அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.

இது குறித்து எலுமிச்சை கமிஷன் கடை உரிமையாளர் மணி வண்ணன் கூறியதாவது: தேவை அதிகரிப்பு காரணமாக, 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை எலுமிச்சை ரூ.3,500 முதல் ரூ.4,500 வரை விற்பனையாகிறது. கோடை காலத்தில் விற்கப்பட்ட விலையே தற்போதும் விற்கப்படுகிறது. எலுமிச்சம் பழங்களை வாங்கிச் செல்லும் வியாபாரிகள் வெளிச் சந்தையில் ஒரு பழம் ரூ.4 முதல் ரூ.6 வரை விற்பனை செய்கின்றனர். இப்போதைக்கு எலுமிச்சை விலை குறைய வாய்ப்பில்லை என்றார்.