Threads அறிமுகம்- மார்க்ஸூகர்பர்க் ட்வீட் : வைரலாகும் ஸ்பைடர்மேன் மீம்

ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக மெட்டா நிறுவனம் ‘த்ரெட்ஸ்’ என்ற பெயரில் புதிய சமூக வலைதளத்தை அறிமுகம் செய்துள்ள சூழலில் மெட்டா நிறுவனத் தலைவர் மார்க் ஸூகர்பர்க் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக ஒரு ட்வீட்டைப் பதிவு செய்துள்ளார்.

அந்த ட்வீட்டில் ஒரே ஒரு மீம் மட்டும் மார்க் பகிர்ந்துள்ளார். அதில் ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் தன்னைப் போன்றே இன்னொரு உருவத்தை எதிர்கொள்ளும் ஃபேஸ் ஆஃப் காட்சி இடம் பெற்றிருக்கிறது. அது தவிர அந்த ட்வீட்டில் எவ்வித கேப்ஷனும் இல்லை. ஆனால் படத்தைப் பார்க்கும் போதே அது ட்விட்டருக்கு போட்டியாக த்ரெட்ஸ் களம் இறங்கியதைக் குறிக்கும் வண்ணத்தில் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த மாத இறுதியில், மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஸூகர்பெர்க் உடன் கூண்டுக்குள் நேருக்கு நேர் மோத தான் தயார் என ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் ட்வீட் செய்திருந்தார். அதை கவனித்த மார்க் மோதலுக்கு தானும் தயார் என இன்ஸ்டாகிராம் வாயிலாக சம்மதம் தெரிவித்திருந்தார். அத்துடன் மோதலுக்கான நிகழ்விடத்தை அனுப்பவும் எனவும் அவர் கேட்டிருந்தார். உடனே அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள ‘Vegas Octagon’ என மஸ்க் ட்வீட் செய்திருந்தார். பலே போட்டி என நெட்டிசன்கள் இதனை உற்சாகமாகப் பார்த்துப் பகிர்ந்து பின்னூட்டாங்களை பதிவு செய்தனர்.

ட்விட்டருக்கு மாற்றாக புதிய சமூக வலைதளம் ஒன்றை உருவாக்கிய மெட்டா, இன்ஸ்டாவை மையமாக வைத்தும் இயங்கும் அந்த புதிய தளத்தின் முன்னோட்டத்தை மெட்டா ஊழியர்களின் பார்வைக்கு முன்வைத்திருந்த வேளையில்தான் மஸ்க் சவால் விடுத்து ட்வீட் செய்திருந்தார். இந்த நிலையில் த்ரெட்ஸ் மூலம் கோதாவில் குதித்துள்ளார் மார்க் என்றும் அந்த மீமின் கீழ் சிலர் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

 கடைசியாக கடந்த ஜனவரி 2012-ல் மார்க் ஸூகர்பெர்க் ட்விட்டர் தளத்தில் ஒரு ட்வீட்டை பதிவு செய்திருந்தார். இப்போது த்ரெட்ஸ் அறிமுகத்தை ஒட்டி மீண்டும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

த்ரெட்ஸ் (Threads) என்பது பயனர்கள் எழுத்து (டெக்ஸ்ட்கள்) மூலம் கருத்தைப் பகிரும் சமூக வலைதளம். இதில் ஒருவர் 500 எழுத்துக்கள் வரை ஒரு பதிவில் எழுதலாம். இது ட்விட்டருக்கு மிகப்பெரிய சவாலாக ஏன் அச்சுறுத்தலாகக் கூட இருக்கும் என்று தொழில்நுட்ப நிபுணர்கள் கருதுகின்றனர். இதனை இன்ஸ்டாகிராம் கணக்கின் வாயிலாக ஒருவர் தொடங்கலாம். த்ரெட்ஸில் டெக்ஸ்ட்களே பிரதானம் என்றாலும் இதில் புகைப்படங்கள், ஷார்ட்ஸ், உயர் தர வீடியோக்களையும் பகிரலாம்.