அதிர்ச்சி கொடுக்கும் காய்கறி விலைப்பட்டியல் – தக்காளியை தொடர்ந்து மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்தது!

தமிழ்நாட்டில் தக்காளியின் விலை ரூ.100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் தக்காளியின் விலை 90 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமையலுக்கு அத்தியாவசிய தேவையான தக்காளியின் விலை அதிகரிப்பால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் தக்காளியைத் தொடர்ந்து மற்ற காய்கறிகளின் விலையும் தமிழ்நாட்டில் அதிகரித்திருக்கிறது.

இந்த நிலையில், சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று மேலும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் 75 ரூபாய்க்கு விற்ற தக்காளி மேலும் 15 ரூபாய் உயர்ந்து தற்போது ரூ. 90-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லரை விற்பனை நிலையங்களில் ரூ. 100 முதல் ரூ. 120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் சென்னையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.80-க்கும், பீன்ஸ் விலை ரூ. 110-க்கும், பாகற்காய் விலை ரூ. 60-க்கும், பச்சை மிளகாய் விலை ரூ.80-க்கும், பட்டாணி விலை ரூ. 180-க்கும், இஞ்சி விலை ரூ. 190-க்கும், பூண்டு விலை ரூ.130-க்கும், வண்ண குடமிளகாய் விலை ரூ. 180-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலையின் உயர்வின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீண்டு வராத மக்களுக்கு, மற்ற காய்கறிகளின் விலை அதிகரித்திருப்பது அதிர்ச்சியை அளித்திருக்கிறது.