மணிப்பூரில் பழங்குடி மாவட்டங்களுக்கு தனி உயர் அதிகாரிகள் தேவை: பிரதமருக்கு குகி எம்எல்ஏக்கள் கடிதம்!

மணிப்பூரில் பழங்குடிகள் வசிக்கும் மாவட்டங்களுக்கு தனியாக தலைமைச் செயலாளர், காவல் துறை இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு குகி ஸோ எம்எல்ஏக்கள் 10 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.

மணிப்பூரில் ஆளும் பாஜக ஆட்சியைச் சேர்ந்த 7 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட குகி ஸோ எம்எல்ஏக்கள் 10 பேர், பிரதமர் நரேந்திர மோடியிடம் மனு ஒன்றினை சமர்ப்பித்துள்ளனர். அதில் சுராசந்த்பூர், கான்க்போக்பி, சாந்தேல், தென்நவுபால், பெர்சாவ்ல் ஆகிய ஐந்து மலை மாவட்டங்களில் சிறப்பான நிர்வாகத்தினை உறுதி செய்ய தலைமைச் செயலர் மற்றும் காவல் துறை இயக்குநருக்கு நிகரான உயர் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

அந்த எம்எல்ஏக்கள் வழங்கிய மனுவில், “இம்பால் பள்ளத்தாக்கு எங்களுக்கு மரணப் பள்ளத்தாக்காக மாறியுள்ள நிலையில், குகி ஸோ பழங்குடியினத்தைச் சேர்ந்த ஐஏஎஸ், எம்சிஎஸ் (மணிப்பூர் குடிமைப்பணி) மற்றும் ஐபிஎஸ், எம்பிஎஸ் (மணிப்பூர் காவல் பணி) அதிகாரிகள் இம்பால் பள்ளத்தாக்குக்கு மாறிவிட்டதால் அவர்களால் தங்களின் கடமையினைச் செய்யமுடியாமல் போனது. இதனால் குகி ஸோ பழங்குடியின அரசு அதிகாரிகள் சந்திக்கும் இந்தச் சிக்கலை தீர்க்கவும், மலை மாவட்டங்களில் சிறப்பான நிர்வாகத்தினை உறுதி செய்யவும் தலைமைச் செயலாளர், காவல் துறை இயக்குநர் அல்லது அதற்கு இணையான உயர் அதிகாரம் கொண்ட பதவிகளை உடனடியாக உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

அதேபோல், பொது நலன் கருதி குடிமைப்பணி மற்றும் காவல் துறைகளில் முக்கிய உயர் பதவிகளையும் உருவாக்க வேண்டும் என்றும், மணிப்பூர் இனக் கலவரத்தால் தங்களின் வீடுகள், வாழ்வாதாரத்தினை இழந்த குகி ஸோ பழங்குடி மக்களின் மறுவாழ்வுக்காக பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.500 கோடி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், குகி ஸோ சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இம்பால் பள்ளத்தாக்கில் எவ்வாறு குறிவைக்கப்பட்டார்கள் என்பதற்கான நிகழ்வுகளையும் எம்எல்ஏக்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்னதாக, குகி ஸோ எம்எல்ஏக்கள் பழங்குடியின மக்களுக்கு தனியான நிர்வாக அமைப்பு வேண்டும் என்று கூறிவந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மணிப்பூரில் நடந்து வரும் இனக்கலவரத்தை கண்டித்து கட்சி பேதமின்றி அனைத்து குகி ஸோ சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் இம்மாதம் 21-ம் தேதி தொடங்கும் மணிப்பூர் சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை.

COCOMI என்கின்ற மைத்தேயி சமூக அமைப்பானது குகி ஸோ சமூகத்துக்கான தனி நிர்வாகம் என்ற கோரிக்கையை ஒருமனதாக நிராகரிக்கும் வகையில் முன்கூட்டியே சட்டப்பேரவை கூட்டத்தினை கூட்ட அழைப்பு விடுத்துள்ளது. மேலும், குகி ஸோ சமூக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்குகொள்ள விரும்பினால் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மணிப்பூரின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் மைத்தேயி இனத்தையும், 40 சதவீதம் பேர் மலைகளில் வசிக்கும் நாகா மற்றும் குகி பழங்குடியினத்தையும் சேர்ந்தவர்கள். பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிக்கும் மைத்தேயி இனத்தவர்கள் தங்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து கோரியதில் அவர்களுக்கும் நாகா உள்ளிட்ட பழங்குடியினத்தவர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. கடந்த 3 மாதங்களாக மணிப்பூரில் நடைபெற்று வரும் இதுதொடர்பான வன்முறை சம்பவங்களில் 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பதுடன் ஆயிரக்கணக்கானோர் காயமடைந் துள்ளனர். இதனிடையே மே 4-ம் தேதி தொடங்கிய வன்முறையின் போது குகி ஸோ பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடையின்றி ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.