இந்தியாவில் மாற்று எரிபொருட்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவது மட்டும் அல்லாமல் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக முன்னேற வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் எரிபொருள் மற்றும் எரிவாயுவை குறைக்க வேண்டும்.
இந்த முக்கியமான இலக்கை எட்ட ஏற்கனவே எத்தனால் எரிபொருளில் இயங்கும் FLEX டெக்னாலஜி கொண்ட வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ள வேளையில், அடுத்ததாக ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் வாகனங்களை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஹைட்ரஜன் வாயு என்பது ஆட்டோமொபைல் துறையில் மட்டும் அல்லாமல் அனைத்து துறையிலும் பயன்படுத்தும் முக்கிய எரிபொருளாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியாவின் முதல் கிரீன் ஹைட்ரஜன் ஹப் தூத்துக்குடியில் உள்ள VOC துறைமுகத்தில் 50,000 முதல் 80,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து அமைக்கப்பட உள்ளது. மேலும் ஹைட்ரஜன் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதற்காக VOC துறைமுகத்தில் டிரான்ஷிப்மென்ட் ஹப் தேவைப்படுதால் இதற்கு 6,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு தேவைப்படுகிறது.
அக்டோபரில் நடைபெறவுள்ள உலக கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023 (ஜிஎம்ஐஎஸ்) க்கு முன்னதாக திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் செயலர் டி.கே.ராமச்சந்திரன், இந்தியாவில் குஜராத் மாநில காண்ட்லா, ஒடிஷா மாநிலத்தின் பாரதிப் மற்றும் தமிழ்நாட்டில் தூத்துக்குடி துறைமுகங்களில் கிரீன் ஹைட்ரஜன் ஹப் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
இதற்காக பல்வேறு முதலீட்டாளர்கள், கூட்டாளிகளிடம் விருப்ப விண்ணப்பத்தை பெற துவங்கியுள்ளோம். குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் கிரீன் ஹைட்ரஜன் ஹப் அமைக்க சுமார் 20 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர், இதில் சில பெறிய நிறுவனங்களின் பெயரும் உள்ளது. குஜராத் மாநில காண்ட்லா துறைமுகத்தில் அமைக்கப்படும் கிரீன் ஹைட்ரஜன் ஹப்-க்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் என்றும், தமிழ்நாட்டில் தூத்துக்குடி துறைமுகத்தில் அமைக்கப்படும் கிரீன் ஹைட்ரஜன் ஹப்-க்கு 50000 முதல் 80000 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டை ஈர்க்கும் என டி.கே.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இதில் முக்கியமாக தமிழ்நாட்டில் தான் முதலாவதாக கிரீன் ஹைட்ரஜன் ஹப் அமைக்கப்பட உள்ளது. மேலும் கிழக்கு பகுதியில் இருக்கும் உலக நாடுகளுக்கு கிரீன் ஹைட்ரஜன் சப்ளை முனையமாக தூத்துக்குடி VOC துறைமுகம் இருக்கும் என தெரிவித்தார்.