தேசிய நல்லாசிரியர் விருது – 2023 அறிவிப்பு – தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு!

2023ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தை சேர்ந்த 2 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இந்தியா முழுவதும் சிறப்பாக பணியாற்றி ஆசிரியர்களின் சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் சார்பில் விருதுகள் வழங்கப்படுது வழக்கம்.

மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதும், ஒவ்வொரு மாநில அரசு சார்பில் நல்லாசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் 2023ம் ஆண்டில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டது.

இதில் இந்தியாவில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர், ஆசிரியர்கள் 50 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதி ஆகியோருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. செப்டம்பர் 5ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.