திரையில் சமரசம் செய்யாத நடிப்பு அரக்கன்: ஃபஹத் ஃபாசில் !

இந்திய சினிமாவில் தன்னால் இதுதான் முடியும் என்று உணர்ந்து தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து, அதில் சிறப்பாக நடிக்கும் நடிகர்கள் பலர் உண்டு. ஆனால் தனக்கான வரையறைகளை உடைத்து எந்தக் கதாபாத்திரம் கிடைத்தாலும் அதை சவாலாக ஏற்று அதற்கேற்ப தன்னை மெருகேற்றி, அந்தக் கதாபாத்திரம் பார்வையாளர்களின் மனதில் என்றென்றும் தங்கிவிடக்கூடிய அளவுக்கான தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள் ஒரு சிலரே. அந்த ஒரு சில நடிகர்களில் ஒருவரான ஃபஹத் ஃபாசிலின் பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட் 8).

திரையுலக பிரபலங்களின் வாரிசுகள் திரைத் துறைக்குள் நுழைவது என்பது இந்திய சினிமாவுக்கு புதிதல்ல. ஆனால், பிரபல இயக்குநர் ஃபாசிலின் மகனான ஃபஹத் ஃபாசில் சினிமாவில் நுழைந்த கதையே சுவாரஸ்யமானது. மற்ற வாரிசு நடிகர்களைப் போலவே ஃபஹத் ஃபாசிலும் தன் தந்தையின் இயக்கத்தில் 2002-ஆம் ஆண்டு வெளியான ‘கையேத்தும் தூரத்து’ என்ற படத்தில் மிகச் சாதாரணமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார். படம் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வி. ஊடகங்கள் அனைத்து படத்தை கடுமையான முறையில் விமர்சித்தன.

விமர்சனங்களால் துவண்டு போன ஃபஹத், ஒரு பேட்டியில் “என்னுடைய தோல்விக்கு என் தந்தை மீது குற்றம் சுமத்தாதீர்கள். இது முழுக்க முழுக்க என்னுடைய தோல்வி” என்று குறிப்பிட்டிருந்தார். தன்னுடைய மேல்படிப்புக்காக அமெரிக்கா கிளம்பிச் சென்ற ஃபஹத் ஃபாசில் மீண்டும் மலையாள திரையுலகுக்குள் நுழைந்தது 2009-ல்.

மம்மூட்டியின் ‘கேரளா கஃபே’, ‘பிரமனி’, ஜெயசூர்யா நடித்த ‘காக்டெயில்’ உள்ளிட்ட படங்களில் உறுதுணைக் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த ஃபஹத் ஃபாசிலுக்கு 2011-ஆம் ஆண்டு வெளியான ‘சாப்பா குரிஷு’ படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் புதிய அலை மலையாள திரைப்படங்களுக்கான ஒரு திறவுகோலாக அமைந்தது. மேலும், ஃபஹத் ஃபாசிலுக்கு கேரள அரசின் சிறந்த உறுதுணை நடிகருக்கான விருதும் கிடைத்தது.

முதல் படத்தின்போது எந்த நடிப்புக்காக விமர்சிக்கப்பட்டாரோ இன்று அதே நடிப்புக்காக பாராட்டப்படுகிறார் ஃபஹத். ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பாற்றலை மெல்ல மெல்ல மெருகேற்றி இன்று இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

2013-ஆம் ஆண்டு ராஜீவ் ரவி இயக்கத்தில் வெளியான ‘அன்னயும் ரசூலும்’ படம் ஃபஹத் ஃபாசிலின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது. அதே ஆண்டில் வெளியான ‘நார்த் 24 காதம்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதை ஃபஹத் ஃபாசில் வென்றார். தொடர்ந்து அஞ்சலி மேனன் இயக்கத்தில் 2014-ஆம் ஆண்டு வெளியான ‘பெங்களூர் டேஸ்’ படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஃபஹத் ஃபாசிலை பிரபலமடையச் செய்தது. இப்படத்தில் துல்கர் சல்மான், நிவின் பாலி நஸ்ரியா ஆகிய மூவரை சுற்றியே படம் நிகழ்ந்தாலும் கடைசி சில காட்சிகளில் ஒட்டுமொத்த கதையும் ஃபஹத் பக்கம் திரும்பி விடும். சிடுசிடுப்பான கணவனாக படம் முழுக்க வரும் அவர், தன்னுடைய ஃப்ளாஷ்பேக் மூலம் உருக வைத்துவிடுவார்.

2016-ஆம் ஆண்டு மகேஷ் நாராயணன் வெளியான ‘மஹேஷிண்டே பிரதிகாரம்’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல்ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. தந்தையுடன் அமைதியான வாழ்க்கை வாழும் போட்டோகிராஃபரான் மகேஷையும், அவரது காதல் வாழ்க்கையை பற்றி பேசும் இப்படத்தில் அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருப்பார் ஃபஹத் ஃபாசில். இதே கூட்டணி அடுத்த வந்த ‘தொண்டிமுதலும் த்ரிக்‌ஷாக்‌ஷியும்’ படத்திலும் தொடர்ந்த இப்படத்தில் திருடன் கதாபாத்திரத்தில் தனி ஆவர்த்தனமே நிகழ்த்தியிருப்பார் ஃபஹத். ஒவ்வொரு காட்சியில் பார்வையாளர்களுக்கு அந்தக் கதாபாத்திரம் கடும் எரிச்சல் வரும் அளவிலான நடிப்பை வழங்கியிருப்பார். இப்படத்துக்காக அவருக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார் ஃபஹத் ஃபாசில். இப்படத்தில் அவருக்கு நெகட்டிவ் கதாபாத்திரம். நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் இல்லை என்றாலும், கூடவே இருந்து குழி பறிக்கும் ஆதி கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருப்பார். 2019-ஆம் ஆண்டு வெளியான ‘கும்பலாங்கி நைட்ஸ்’ படத்தில் ஷம்மி என்ற சைக்கோ கதாபாத்திரத்தை மலையாள சினிமா ரசிகர்களால் மறக்க முடியாது. இப்படத்தின் குறைவான காட்சிகளேயே வந்தாலும் கிளைமாக்ஸில் முழு சைக்கோவாக மாறும் இடத்தில் அதகளம் செய்திருப்பார்.

கரோனா காலக்கட்டம் ஓடிடி வழியே மலையாள சினிமாவை இந்தியா முழுக்க கொண்டு சேர்க்க உதவியது. சமீபத்தில் ஒரு பேட்டியில் ஃபஹத் ஃபாசிலின் நண்பரும், முன்னணி இயக்குநருமான வினீத் ஸ்ரீனிவாசன் இவ்வாறு கூறியிருந்தார், ‘ஃபஹத் தனக்கான இடத்தைப் பிடிக்க கடுமையான உழைத்தார். அவர் இன்று இருக்கும் இடத்தை நினைத்து நான் பெருமை அடைகிறேன். ஓடிடி ரசிகர்கள் மத்தியில் மலையாள சினிமா பிரபலமானதற்கு ஃபஹத் ஃபாசில் தாராளமான உரிமை கொண்டாடலாம்”. அந்த அளவுக்கு மலையாள சினிமாவை மற்ற மொழி ரசிகர்களுக்கு அறிமுகம் செய்ததில் ஃபஹத்தின் பங்கு அளப்பரியது.

கரோனாவுக்குப் பின் ஓடிடியில் வெளியான ‘சி யூ சூன்’, ‘இருள்’, ‘ஜோஜி’ ஆகிய படங்களின் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் அனைத்து மொழி பார்வையாளர்கள் மனதில் இடம்பிடித்தார் ஃபஹத் ஃபாசில். பின்னர் திரையரங்கில் வெளியான ‘மாலிக்’ படத்தில் தன்னுடைய திரைப்பயணத்தில் மிகச் சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார். இப்படம் மலையாள சினிமாவின் கிளாசிக் படங்களில் ஒன்று என தாராளமாக சொல்லலாம்.

தமிழில் ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘விக்ரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் ஃபஹத் ஃபாசிலை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்து விட்டது. வில்லன் கதாபாத்திரம் என்றாலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பின் மூலம் பார்வையாளர்கள் மனதில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தார். சமீபத்தில் ஃபஹத் நடித்த ரத்தினவேலு கதாபாத்திரத்துக்கு செய்யப்பட்ட எடிட் வீடியோக்கள் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகின. தன்னுடைய கதாபாத்திரம் பிரபலமாகி விட்டது என்பதற்காக முதலில் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கவர் படமாக வைத்த அவர், பின்னர் அது எந்த நோக்கத்துக்காக பரப்பப்பட்டது என்பதை அறிந்ததும் அதனை உடனடியாக நீக்கி தன்னுடைய சமூக அக்கறையையும் வெளிப்படுத்தினார்.

இதுவரை 50-க்கும் மேற்பட்ட படங்களில் ஃபஹத் நடித்துவிட்டார். ஆனால், ஒரு படத்தில் நடித்த கதாபாத்திரம் போல இன்னொரு படத்தில் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து வருகிறார். நடிப்பு தவிர்த்து ஃபஹத் ஃபாசிலுக்கு கண்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. தன் கண் அசைவுகளாலேயே ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உளவியல் தன்மையை வேறுபடுத்திக் காட்டும் திறன் ஃபஹத் ஃபாசிலுக்கு வாய்த்துள்ளது.

இந்தக் கதாபாத்திரத்தை தேர்வு செய்வதால் தன்னுடைய இமேஜுக்கு பாதிப்பு வருமா, நாளை இதேபோன்ற கதாபாத்திரங்கள் தொடர்ந்து வந்தால் என்ன செய்வது என்பது குறித்தெல்லாம் ஃபஹத் கவலைப்படுவதில்லை. அந்தக் கதாபாத்திரம் பார்வையாளர்களின் மனதில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் என்பதை கருத்தில் படங்களை அவர் தேர்வு செய்து வருகிறார். இதுவே அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருக்கிறது.

திரையில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல் தனது வித்தியாசமான நடிப்பாற்றலால் மலையாளம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமுள்ள சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள ஃபஹத் ஃபாசில், நடிப்பில் மேலும் பல சாதனைகள் புரிய அவரது ரசிகர்களுடன் சேர்ந்து நாமும் வாழ்த்துவோம்.