UPSCயின் தலைவராக நியமிக்கப்பட்ட கல்வியாளர்!

UPSCயின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்த பேராசிரியர் மனோஜ் சோனி

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட இந்திய ஆட்சிப் பணிகள் மற்றும் மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கும் தேர்வினை நடத்தி தகுதியான ஆட்களை தேர்வு செய்து கொடுக்கிறது யூபிஎஸ்சி அமைப்பு.

இந்த தன்னாட்சி அமைப்பான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு ஒரு தலைவரும் 10 உறுப்பினர்கள் இருக்கலாம். தற்போது அதில் 5 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். மேலும், அதற்கான தலைவர் நியமிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு யூபிஎஸ்சியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார் குஜராத்தில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இரண்டு முறையும், பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை ஒரு முறையும் வகித்த பேராசிரியர் மனோஜ் சோனி.

யூபிஎஸ்சியின் தலைவர் பதவி காலியாக இருந்த சூழலில் பேராசிரியர் கல்வியாளர் மனோஜ் சோனி பொறுப்பு தலைவராக பணியாற்றி வந்திருக்கிறார். இப்போது யூபிஎஸ்சி அமைப்பு பேராசிரியர் மனோஜ் சோனியை யூபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ தலைவராக அறிவித்திருக்கிறது.