மதுரை மாட்டுத்தவனியில் விற்காமல் வீணாகும் நிலையில் உள்ள காய்கறிகள்- விவசாயிகள் வேதனை

மதுரை: ஓணம் பண்டிகை முடிந்த நிலையில் மீண்டும் காய்கறிகள் விலை வேகமாக சரியத் தொடங்கி உள்ளது.

ஓணம் பண்டிகை முடிந்த நிலையில் மீண்டும் காய்கறிகள் விலை வேகமாக சரியத் தொடங்கி உள்ளது. இதனால், குறைந்தபட்ச ஆதார விலைகூட கிடைக்காமல் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். மதுரையில் மாட்டுத்தாவணி மற்றும் பரவையில் செயல்படும் மொத்த விலை காய்கறி மார்க்கெட்டுகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. பரவை மார்க்கெட்டுக்கு மட்டும் தினமும் 450 டன் உருளைக் கிழங்கு, 500 டன் பெரிய வெங்காயம், 250 டன் சிறிய வெங்காயம் மற்றும் பிற காய்களில் 300 டன் விற்பனைக்கு வருகின்றன.

அதுபோல், மாட்டுத்தாவணி மார்க் கெட்டுக்கு 30 லாரிகளுக்கு மேல் காய் கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இரு மார்க்கெட்டுகளில் இருந்தும் 9 மாவட்டங்கள் மற்றும் கேரளாவுக்கு காய்கறிகள் விற்பனைக்குச் செல்கின்றன. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை கர்நாடகா, ஆந்திராவில் பெய்த கன மழையால் தமிழகத்தில் தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.200 விலை உயர்ந்தது. மற்ற காய்கறிகள் விலையும் கணிசமாக உயர்ந்தது. அதன் பிறகு தமிழகத்தில் உள்ளூர் தக்காளி உட்பட பிற காய்கறிகள் விற்பனைக்கு வந்த நிலையில் ஓணம் பண்டிகை வந்தது.

ஓணம் பண்டிகைக்கு மாட்டுத்தாவணி, பரவை, ஓட்டன்சத்திரம் காய்கறி மார்க் கெட்டுகளில் இருந்து அதிகளவு காய் கறிகள் சென்றன. ஓணம் பண்டிகை முடிந்ததால் கேரளாவுக்கு செல்லும் காய் கறிகளின் அளவு குறைந்தது. மாட்டுத் தாவணி, பரவை மார்க்கெட்டுகளில் காய் கறிகள் வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. அதன் விலை குறையத் தொடங்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பரவை காய்கறி மார்க்கெட் தலைவர் ராஜ் கூறுகையில், “கடந்த மாதம் ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையான தக்காளி நேற்று முதல் தரம் 15 கிலோ பெட்டி ரூ.140 முதல் ரூ.150 வரையும், உடைசல் தக்காளி ரூ.80 முதல் ரூ.100 வரையும் விற்பனையானது. இதுவரை ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வந்த தக்காளிகள் கிலோ ரூ.20 முதல் ரூ.40 வரை அதன் தரத்தைப் பொருத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது தமிழகத்தில் அறுவடை செய்த தக்காளி வரத் தொடங்கி உள்ளது. இதனால் விலையும் சரிகிறது’’ என்றார்.

 மாட்டுத்தாவணி அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்புத் தலைவர் சின்ன மாயன் கூறியதாவது: தக்காளி விலை உயர்ந்ததும் மக்கள் பலரும் கொதித்தனர். தற்போது அறுவடை செய்த தக்காளியை விவசாயிகள் விற்க கொண்டு வந்தால் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கூட கிடைக்கவில்லை.

தக்காளியை மதிப்புக் கூட்டும் பொருட்களாக மாற்ற தொழிற்சாலைகள் தொடங்க வலியுறுத்துகிறோம். ஆனால், அரசு அதைக் கவனத்தில் கொள்ளவில்லை. அதிகாரிகள் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதில்லை. நேற்று தக்காளி மட்டுமின்றி வெண்டைக்காயும் கிலோ ரூ.4 முதல் ரூ.5-க்கு விற்பனையானது. வெண்டைக்காயை அறுவடை செய்து மார்க்கெட்டுக்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல.

வெண்டைக்காய்களை உடைத்து அறு வடை செய்யும்போது கை புண்ணாகி விடும். கஷ்டப்பட்டு உடைத்து எடுத்து வரும் வெண்டைக்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். சீனி அவரைக்காய் ரூ.15 முதல் ரூ.20-க்கு விற்கிறது. கேரட் ரூ.30, சவ்சவ் ரூ.20, முட்டைகோஸ் ரூ.30, கத்திரிக்காய் ரூ.20-க்கு விற்கிறது.

காய்கறிகள் விளைச்சல் அதிகமானதால் விலை குறைந்துவிட்டது. ஓணம் பண்டி கையையொட்டி கொஞ்சம் விலை உயர்ந்தது. ஓணம் முடிந்துவிட்டதால் நாட்டுக் காய்கறிகள் விலை மிகவும் குறைந்துவிட்டது என்றார்.