மணிப்பூரில் தொடரும் வன்முறை: குகி இனத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொலை.

இம்பால்: மணிப்பூரில் குகி ஸோ இனத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் கங்போப்கி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஆயுதக் குழுவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணியளவில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குகி ஸோ இனத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் ஈடுபட்ட ஆயுதக் குழுவினர் ஒரு வாகனத்தில் வந்ததாகவும் அவர்கள் மேற்கு இம்பால் – கங்போப்கி மாவட்டங்களுக்கு இடையே உள்ள எல்லை கிராமங்களால் இரங், கராம் பகுதிகளில் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மலைகிராமங்களான இந்த இரு கிராமங்களிலும் பழங்குடிகளே அதிகம் வசிக்கின்றனர். முன்னதாக கடந்த 8 ஆம் தேதி டெங்னோபால் மாவட்டத்தில் பாலல் எனுமிடத்தில் நடந்த வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்தச் சம்பவத்தின் தாக்கம் குறைவதற்குள் இன்று இன்னொரு தாக்குதல் நடந்துள்ளது.

மே 3-ல் தொடங்கிய வன்முறை: மணிப்பூர் மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நாகா, குகி போன்றவர்களை உள்ளடக்கிய பழங்குடியின மக்கள் 40 சதவீதம் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 53 சதவீதம் இருக்கும் மைத்தேயி சமூக மக்களை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே 3 ஆம் தேதி நடந்த பழங்குடியினர் அமைதி பேரணியில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. பின்னர் இது வன்முறையாக மாறி மாநிலம் முழுவதும் பரவியது. வன்முறையில் மணிப்பூர் மாநிலமே பற்றி எரிந்தது.

வன்முறையைக் கட்டுப்படுத்த மாநில அரசு, ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபில் படையினரை வரவழைத்தது. இந்த வன்முறையில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து, ஆயிரக்கணக்கானோர் வீடுகளை, வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் இன்னமும் கூட அங்கு பதற்றம் முழுமையாக நீங்கியபாடில்லை. இந்நிலையில் இன்று மீண்டும் அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டதால் பதற்றம் உருவாகியுள்ளது.