தமிழ்நாட்டை காப்பாற்றிவிட்டோம் ; இனி இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் – 2024 தேர்தல் குறித்து திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாகை எம்.பி. செல்வராஜ் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , தமிழ்நாட்டை காப்பாற்றிவிட்டோம் ; இனி இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என பேசினார்.

இன்று திருவாரூரில் நடைபெற்ற நாகை எம்.பி. செல்வராஜ் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மண மக்களை வாழ்த்தினார். பின்னர், அங்கிருந்த தொண்டர்களிடையே உரையாற்றினார்.

அப்போது, “உழவர்களுக்காக நாகையில் 50 இடங்களில் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர் எம்பி செல்வராஜ். செல்வராஜ் 4 முறை எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ளார். அனைத்து தடவையும் திமுக கூட்டணியில் இருந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை திருவாரூரில் இருந்தே தொடங்கிவிட்டேன். கம்யூனிஸ்ட் கட்சி உடனான கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் .

தமிழ்நாட்டை காப்பாற்றி விட்டோம். வரும் தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் . மும்பையில் நடைபெற உள்ள ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.