சனாதனத்திற்கு எதிராக பேசினால், நாக்கைப் பிடுங்குவோம் ; கண்ணை நோண்டுவோம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார் மத்திய ‘ஜல்சக்தி’ துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்.
பா.ஜ.க. சார்பாக ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் நடைபெற்ற பரிவர்த்தன் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “உயிரை தியாகம் செய்து நமது முன்னோர்கள் கட்டி காத்து வந்த சனாதன தர்மத்தை சிலர் அழிக்க நினைக்கின்றனர்.
அவர்களை இனியும் சகித்து கொள்ள முடியாது. சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். நீங்கள் இவ்வாறு பேசினால் உங்கள் நாக்கை பிடுங்கி விடுவோம். எங்களை கீழ்த்தரமாக, அவமரியாதையுடன் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் பிடுங்கப்படும். சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் ஒரு நிலையான அரசியல் செய்து விட முடியாது.” என பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சனாதனம் எதிர்க்கப்பட வேண்டியது அல்ல. ஒழிக்கப்பட்ட வேண்டியது’ என பேசியது இந்திய அளவில் பாஜகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ஒருவர் இப்படி பேசியிருப்பது, மீண்டும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது.