கோடையில் மும்பை:தூத்துக்குடி இடையேயான வாராந்திர இரயில் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!

பயணிகள், வணிகர்களின் கோரிக்கையை ஏற்று கோடை காலத்தில் மும்பை – தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு வந்த இரயில் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மும்பை – தூத்துக்குடி வாராந்திர சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ‘தொழில் நகரமான தூத்துக்குடியை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைப்பதற்கு தேவையான நீண்ட தூர ரயில்கள் இல்லை’ என, தொழில் வர்த்தக சங்கங்கள், பயணிகள் நலச்சங்கம், நுகர்வோர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

கோடைகால கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தூத்துக்குடி- மும்பை இடையே 2 கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. மும்பையில் இருந்து மே 26 மற்றும் ஜூன் 2-ம் தேதியும், தூத்துக்குடியில் இருந்து மே 28 மற்றும் ஜூன் 4-ம் தேதியும் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. பயணிகள் மத்தியில் இவை மிகுந்த வரவேற்பை பெற்றன.

இதையடுத்து மும்பை – தூத்துக்குடி இடையே நிரந்தர ரயில் இயக்க வேண்டும் என, மாவட்ட பயணிகள் நலச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. அதன்பேரில் மும்பை – தூத்துக்குடி இடையே வாராந்திர சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் கடந்த மாதம் முழுவதும் இயக்கப்பட்டது. மும்பையில் இருந்து வெள்ளிக் கிழமைகளில் மதியம் 1.15 மணிக்கும், தூத்துக்குடியில் இருந்து ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகாலை 4 மணிக்கும் இந்த ரயில் புறப்பட்டது.

பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், இந்த ரயிலை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. வண்டி எண் 01143 மும்பை- தூத்துக்குடி சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் 4.8.2023 முதல் 1.9.2023 வரையும், வண்டி எண் 01144 தூத்துக்குடி – மும்பை சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் 6.8.2023 முதல் 3.9.2023 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டணம், நேரம், பெட்டிகளின் எண்ணிக்கை, நிறுத்தங்கள் போன்றவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.