தி.மு.க பெயரைக் கேட்டால் அரசியல் எதிரிகள் அலறுகிறார்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கலைஞர் நூற்றாண்டு விழாவை மாவட்டக் கழகங்கள், அணிகள் இணைந்து கொண்டாடுவீர் என்று தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- அதற்குள்ளாகவா ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன என்று நினைக்கின்ற அளவிற்கு நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கின்ற முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவேந்தலை ஆகஸ்ட் 7-ஆம் நாள் அமைதிப் பேரணியுடன் கடைப்பிடித்தோம். ‘மறந்தால்தானே நினைப்பதற்கு’ என்பதுபோல நம் இதயத்துடிப்பாக இருந்து, இயக்கம் காக்கின்ற தலைவர் கலைஞர் அவர்களின் நினைவு நாளில், அவர் தன் அண்ணனுக்கு அருகில் ஓய்வு கொள்ளும் கடற்கரை நோக்கி உங்களில் ஒருவனான என் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

வங்கக் கடலை நோக்கி மனிதக் கடல் செல்வது போல, அலை அலையாய்த் திரண்டு வந்த உடன்பிறப்புகள் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் நம் தலைவர் கலைஞர் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டேன். உங்களில் ஒருவனான என் நெஞ்சிலும் அவரே இருக்கிறார். அவரே நம்மை எந்நாளும் இயக்குகிறார்.

இந்தியாவின் தலைநகரிலும் பிற மாநிலங்களிலும் நம் தலைவர் கலைஞர் அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரைக் கேட்டால் அரசியல் எதிரிகள் அலறுகிறார்கள். நாட்டின் பிரதமர், தான் கலந்துகொண்ட மத்திய பிரதேச மற்றும் அந்தமான் நிகோபர் நிகழ்ச்சிகளில் தி.மு.க. மீது தேவையின்றி விமர்சனம் வைக்கின்றார். நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அரசு மீது ‘இந்தியா’ கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது ஆணித்தரமான வாதங்களை அடுக்கிப் பேசினார் காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் அன்புச் சகோதரர் ராகுல்காந்தி அவர்கள்.

மணிப்பூரைப் பற்றி, அங்கு நடக்கும் கலவரம் பற்றி அங்கே பற்றி எரியும் வன்முறைத் தீ பற்றிப் பேசினார். ‘பாரத் மாதா கீ ஜே’ என்று கோஷம் போடும் பா.ஜ.க.வின் ஆட்சியில் மணிப்பூரில் பாரத மாதா என்ன நிலையில் இருக்கிறார் என்பதைக் கேள்வியாக முன்வைத்தார் ராகுல் காந்தி. இப்படியெல்லாம் பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்பார் என்பதால்தான் அவரது எம்.பி. பதவியைப் பறிப்பதில் பா.ஜ.க. படுவேகம் காட்டியது. ஆனால், உச்சநீதிமன்றம் சென்று நீதியை நிலைநாட்டி, நாடாளுமன்றத்தில் இளஞ்சிங்கமாக நுழைந்து கர்ஜித்திருக்கிறார் ராகுல்.