மக்களவை தேர்தலை பாஜக முன்கூட்டியே நடத்துவதற்கு திட்டமிடுவதாக ஏற்கனவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.
பீகார் மாநிலத்தில் நாலந்தா திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்துவைத்தார். அப்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, ‘மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடத்த பாஜக திட்டமிடுவதாக’ தெரிவித்திருக்கும் கருத்து குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த நிதிஷ்குமார், “நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடக்கலாம் என்று நான் கடந்த ஏழு, எட்டு மாதங்களாகவே கூறிவருகிறேன். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை காரணமாக, அதிக தொகுதிகளில் தோல்வி ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் மத்திய பா.ஜனதா அரசு அவ்வாறு நடத்தக்கூடும். எனவே, மக்களவை தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் அணிதிரள வேண்டும். எனக்கு என்று தனிப்பட்ட லட்சியமோ, ஆசையோ இல்லை. தேர்தலுக்கு முன்பாக, பா.ஜனதாவுக்கு எதிராக அதிகமான கட்சிகளை ஒன்று திரட்ட வேண்டும் என்பதுதான் எனது ஒரே எண்ணம்.
மும்பையில் நடைபெறும் 3-வது கூட்டத்துக்குப் பிறகு, ‘இந்தியா’ கூட்டணி மேலும் வலுப்பெறும். பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவடைந்துள்ளது. அது தொகுக்கப்பட்டு, விரைவில் வெளியிடப்படும்.” என தெரிவித்தார்.