ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளப்போவது யார்..? sl vs pak இடையே இன்று பலப்பரீட்சை

கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 6 அணிகள் பங்கேற்ற நிலையில் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.

சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. தொடர்ந்து நேற்றுமுன்தினம் இலங்கை அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 4 புள்ளிகளுடன் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.

இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் வங்கதேச அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. ஏனெனில் அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம், 2-வது ஆட்டத்தில் இலங்கையிடமும் தோல்வி கண்டிருந்தது. சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் வங்கதேச அணி இந்தியாவுடன் 15-ம் தேதிமோதுகிறது. இந்த ஆட்டத்தின் முடிவுவங்கதேச அணிக்கு சாதகமாக அமைந்தாலும் கூட ஆறுதல் வெற்றியுடன் தொடரில் இருந்து வெளியேறும்.

இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இது கடைசி ஆட்டமாகும். இலங்கை அணி ஒருவெற்றி, ஒரு தோல்வியுடன் -0.200 நெட் ரன் ரேட்டில் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

அதேவேளையில் பாகிஸ்தான் அணியும் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் – 1.892 நெட் ரன் ரேட்டில் 3-வது இடத்தில் உள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 4 புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். ஒருவேளை இன்றைய ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து வழங்கப்படும். இந்தநிலைமை ஏற்பட்டால் நெட் ரன் ரேட் அடிப்படையில் இலங்கை அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து விடும்.பாகிஸ்தான் அணி வெளியேற நேரிடும்.

நசீம் ஷா விலகல்: இதற்கிடையே பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் விலகி உள்ளார்.