உலக செஸ் சேம்பியன்ஷிப் போட்டியில் வெல்லப்போவது யார்? – தொடங்கியது டை பிரேக்கர் சுற்று!

இந்திய செஸ் சேம்பியனான பிரக்யானந்தாவும், உலக செஸ் சேம்பியனான மேக்னஸ் கார்ல்சனும் பங்குபெற்ற இறுதிப்போட்டி டிராவில் முடிந்த நிலையில் இன்று டை பிரேக்கர் சுற்று நடைபெற்று வருகிறது.

பிடே’ உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்று வருகிறது. இதில் இறுதிப்போட்டியில் இந்திய செஸ் சேம்பியனான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 5 முறை உலக செஸ் சேம்பியன் பட்டம் வென்ற நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்செனும் மோதினர், இறுதிப்போட்டி இரு கிளாசிக்கல் ஆட்டத்தை கொண்டது. இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.

இந்த நிலையில் இவ்விரு வீரர்கள் இடையே இறுதிப்போட்டியின் 2-வது சுற்று நேற்று அரங்கேறியது. இதில் ஒன்றரை மணி நேரத்தில் அதாவது 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இருவரும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர். அப்போது இருவரிடம் தலா 8 காய்கள் எஞ்சியிருந்தன. டிராவின் மூலம் இருவருக்கும் தலா அரைபுள்ளி வழங்கப்பட்டது. இரு ஆட்டத்தையும் சேர்த்து 1-1 என்று சமநிலையில் இருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து வெற்றியாளரை முடிவு செய்ய இன்று டைபிரேக்கர் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் டைபிரேக்கர் சுற்று மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டை பிரேக்கர் முதல் சுற்றில் நார்வே அணியின் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். இரண்டாம் சுற்று போட்டி தொடங்க இருக்கிறது.

ரேபிட்’ முறையில் நடக்கும் டைபிரேக்கரில் முதலில் இரு ஆட்டங்களில் விளையாடுவார்கள். ஒவ்வொரு வீரருக்கும் தலா 25 நிமிடங்கள் வழங்கப்படும். அத்துடன் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 10 வினாடி அதிகரிக்கப்படும். இதிலும் சமநிலை தொடர்ந்தால் தலா 10 நிமிடங்கள் கொண்ட மேலும் இரு ஆட்டங்களில் மோதுவார்கள். அதன் பிறகு 5 நிமிடம் கொண்ட ஆட்டங்கள், 3 நிமிடம் ஆட்டம் என்று முடிவு கிடைக்கும் வரை நீடிக்கும்.