மணற் சிற்பம் வடித்து சந்திரயான்-3 வெற்றி பெற வாழ்த்து!

இஸ்ரோ நிலவுக்கு அனுப்பியுள்ள சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க வாழ்த்து தெரிவித்து ஓடிசாவில் மணற் சிற்ப கலைஞர்கள் இணைந்து மணற் சிற்பத்தை வடிவமைத்துள்ளனர். நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது போல இந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6.04 மணிக்கு சந்திரயான்-3 மிஷனின் இலக்காக நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது. தொடர்ந்து அதிலிருந்து பிரிந்து பிரக்யான் ரோவர் நிலவின் பரப்பில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முக்கிய மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது. இது விண்வெளி சார்ந்த ஆய்வில் தனித்துவ சாதனையாகவும் அமைய உள்ளது. நாடு முழுவதும் இந்நிகழ்வை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், ஒடிசாவில் மணற் சிற்ப கலைஞர்கள் இணைந்து நிலவு, விக்ரம் லேண்டர் மற்றும் விண்கலனை அப்படியே அசப்பில் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைத்துள்ளனர். இவர்கள் பிரபல மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ‘சந்திரயானுக்கு வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளனர். இந்த சிற்பத்தை திரளான மக்கள் நேரில் வந்து பார்வையிட்டு வருகின்றனர். ஒடிசா மாநிலத்தின் புரி கடற்கரையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிற்பத்தை எக்ஸ் எனும் ட்விட்டர் தளத்தில் ட்வீட் செய்துள்ளார் சுதர்சன் பட்நாயக்.